search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி நினைவிடம்"

    • கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
    • வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்தன் அடையாளமாக உதயசூரியன் போன்று முகப்பில் கருணாநிதி நினைவிடத்தில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 8-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 28-ந்தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    கலைஞர் நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்கரையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் இரும்பு தடுப்புகள் மற்றும் தகரம் மூலம் 30 அடி உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டது

    கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக அங்கு 15 அடி ஆழத்தில் துளைகள் போடப்பட்டு உள்ளது. 3 வளைவுகள் சிமெண்ட் கான்கிரீட்டில் அமைக்கப்படுகிறது. அந்த கான்கிரீட் வளைவுகளில் கிரானைட் அல்லது மார்பிள் கற்கள் பதிக்கப்பட உள்ளது. மேலும் திறந்த வெளிகாட்சி அரங்கம், அருங்காட்சியம் அமைக்கப்படுகிறது

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் கட்டுமானகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப்பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்பட உள்ளது.

    வருகிற ஜூன் 3-ந்தேதி கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் கருணாநிதியின் நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன.

    • கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
    • மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.

    அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

    உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரமாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது. கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.

    இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.80 கோடி செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்துக்கு(42 மீட்டர்) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்படும். இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும்.

    கடல் மேல் 6 மீட்டர் உயரத்தில் இரும்பிலான இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்படும்.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு படகில் சென்று வருவது போல் மெரினாவில் இருந்து நடுக்கடலுக்கு கடலின் அழகை ரசித்தபடி நடந்து சென்று பேனா சின்னத்தை அடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை 133 அடியாகும். அதாவது 40.5 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் மெரினா கடலில் அமையும் பேனா நினைவு சின்னம் திருவள்ளுவர் சிலையை விட 1 அடி அதிக உயரம் கொண்டதாக 134 அடியில் அதாவது 42 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்பட உள்ளது. கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது.

    மும்பையில் சத்ரபதி சிவாஜிக்கு அரபிக்கடலில் மகாராஷ்டிரா அரசு நினைவு சின்னம் கட்டி வருகிறது.

    அதேபோல் மெரினாவில் வங்க கடலில் பேனா நினைவு சின்னம் எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டத்துக்கு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முன்மொழிவு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடலோர ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    எழுத்தாற்றல் மிக்கவரான கருணாநிதி பல நூல்களை எழுதியவர். அவர் தமிழுக்கு, இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பேனா நினைவு சின்னம் நடுக்கடலில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நினைவு சின்னம் வங்க கடலில் அமையும் போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும்.

    ×